"நல்லதோர் வீணைசெய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ"
சுவிஸ் சமூகத்துக்குள் தமிழ் ஊடகத்துறையின் புத்தம் புதியதொரு தோற்றுவாயாக இன்போ தமிழ் இணைய பல்மொழிச்செய்திச் சேவை 2006ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி உருப்பெற்றது. சுவிஸ் சமூகத்துக்கு , சுவிஸ் தமிழ்ச் சமூகத்தினால் தமிழீழ மக்களினதும் மண்ணினதும் செய்திகள் சென்றடைவது அரிதாகிய சூழலில் பலசவால்களை எதிர்கொண்டு எண்ணிக்கையிலும் செய்தித்தரத்திலும் முதன்மைபெறும் பல்மொழிச் செய்திச் சேவைச் சேவைகளில் இன்போதமிழ் முன்னணி இடம் வகிக்கிறது.
தாய்நாட்டின் நிலவரப் பிரதிபலிப்பாகவும் புலம்பெயர்ந்த தமிழுறவுகளின் தொடர்பூடகமாகவும் எமது செய்திச்சேவை தொழிற்படுகிறது. புகலிட வாழ்வு முழுமை பெறவும் தாயக உணர்வு வலுப்பெறவும் இன்போதமிழ் செய்திச் சேவை முனைப்போடு செல்நெறி தவறாது செய்திச் சேவையினை வழங்கி வருகிறது. சுருங்கக் கூறின் சுவிஸ் ஊடக சமூகத்திற்கும் சுவிஸ் மக்கள் சமூகத்துக்கும் புலம்பெயர்வாழ் இனிய தமிழுறவுகளுக்கும் தமிழீழத் தாயகத்தை முன்னிறுத்தும் ஊடகக் கருவியாக இன்போதமிழ் செய்திச் சேவை தகவலூடகப்பணி ஊடாக உறவுப்பாலத்தை உருவாக்கி தன்பணியாற்றும் . பல சவால்களை எதிர்கொண்ட போதிலும் வீழமாட்டோம் என முழக்கமிட்டு... வேகமாக வளர்ந்துவரும் இன்போதமிழ் செய்திச்சேவை மிகப் பரந்தளவு வாசகர் தளத்தைக் கொண்டுள்ளது. செய்திகளை உடனுக்குடன் மொழிமாற்றம் செய்து வழங்கும் பணியை அது ஆரம்ப நாட்தொட்டுத் தன்பால் கொண்டுள்ளது. துல்லியம், நம்பகத்தன்மை, ஆதாரம், பக்கச்சார்பின்மை, வேகம் என்ற ஐந்து வகை சிறப்புக்களைக் கொண்ட இன்போதமிழ் இணையச் சேவை சுவிஸ் மக்கழுடன் தன்னின அடையாளம் பேணும் எமது சந்ததிக்கும், செய்திச் சேவையூடாக வழிகாட்டியாகவும் முன்னுதாரணமாகவும் அமைந்து தனக்கென அமைத்துக் கொண்ட இலட்சிய வரம்புகளை மீறாது தொடர்ந்தும் செல்நெறி தவறாது சிறப்பாக பணி புரியும்.
செய்திகளைத் தாங்கிச் செல்லும் மொழி தக்க பிரமாணத்தில் அமையவேண்டும் என்ற விதிமுறைக்கு அமைவாகப் பொறுப்புணர்வுடன் எமது நிறுவனம் ஊடகப்பணிமனை சுவிஸ் செயற்படுகிறது. பிறமொழி கலவாத் தமிழை எமது செய்தி வழங்கலில் மொழிமாற்றம் செய்து வெளிக்கொணர்கின்றோம். "கண்வழி, செவிவழி எதுவோ அதுவே சொல்மொழி" என்பது சான்றோர் வாக்கு. கண்ணால் பார்த்த, காதால் கேட்ட மொழிதான் பேச்சுமொழியாகத் தொடர்கின்றது. தமிழ் ஊடகத்துறைக்கு ஒரு முக்கிய கடமை இருக்கிறது. மறைந்து போகும் நல்ல தமிழ்ச் சொற்களை மீண்டும் பாவனைக்குக் கொண்டுவரும் பொறுப்பு அதற்கு இருக்கிறது. மொழி வளர்ச்சியில் இன்போதமிழ் செய்திச் சேவை தீவிர கவனம் எடுத்து மொழிசார் , துறைசார் பிரதிநிதிகளுடன் . உலகத்தின் திசை எங்கும், எமக்காய் எங்களுக்காய் குரல் தரவல்லோரை செய்தித் தொடர்பாளர்களாய், ஆக்குவோராய் ஆதரவுக்கரம் தருவோராய் இணைத்து இறுகப்பற்றி தொடர்ச்சியாக இயங்கும் 24 மணிநேரச் செய்திச் சேவையூடே தேசத்தின் குரலை செய்தித் தளத்தினூடே வெளிக்கொணர களமமைத்துள்ளோம்.
இன்போதமிழ் நிர்வாகம் |