உலகத் தமிழர் பேரவையின் இரண்டுநாள் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து நேற்று கோவை வ.உ.சி.பூங்கா மைதானத்தில் தொடங்கியது.
மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் பங்பேற்கும் இம்மாநாட்டினை புதியதமிழகம் கட்சியின் தலைவர் கே.கிருஷ்ணசாமி ஏற்பாடு செய்து தலைமையேற்று நடாத்துகிறார்.
இம்மாநாட்டை மலேசிய பினாங் மாநிலத்தின் துணை முதலமைச்சரும், நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் செயற் குழுவின் உறுப்பினருமான பேராசியர் பி.இராமசாமி தொடக்கிவைத்து உரையாற்றினார்.
இம்மாநாட்டில், புலவர் புலமைப்பித்தன், மலேசிய நாட்டு எம்.பி குணசேகரன், தொழில் அதிபர் அருணாச்சலம், தமிழ் அறிஞர் பொன்னுரங்கம் உள்பட பலர் உரையாற்றினர்.
பேராசியர் பி.இராமசாமி தனது தொடக்க உரையில் தெரிவித்ததாவது:

உலகத் தமிழர்களின் பாதுகாப்பை பற்றி விவாதிக்க இங்கு மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. உலகமெங்கும் பரந்து விரிந்து கிடக்கும் தமிழனுக்கு, இழ்வளவு காலம் கழிந்து, இப்போதுதான் தனது பாதுகாப்பை பற்றி பேச வேண்டிய அவசியம் வந்துள்ளது.
கடந்த சில மாதங்களில் முடிந்த கசப்பான அனுபவங்களே இதற்கு முக்கிய காரணம். உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு கடந்த ஆண்டு கசப்பான ஆண்டாக அமைந்துவிட்டது. 2009-ம் ஆண்டு தமிழினத்தின் இருண்ட ஆண்டு என எடுத்துக்கொள்ளலாம்.
-
ஒரு தேசத்தில், தமிழினத்தின் தேசிய போராட்டம் ஒடுக்கப்பட்ட சம்பவமே அந்த சம்பவங்களில் முதன்மையானதாகும். தமிழன் என்றால் அடி மட்டுமே வாங்குபவன் என்பதை மாற்றி, அநியாயங்கள் எல்லை மீறும்பட்சத்தில் தமிழனுக்கு அடியும் கொடுக்கத் தெரியும் என்று நிரூபித்தவன் ஈழத்தமிழன்.
உலக வல்லரசுகள் பலவும் சேர்ந்து தமிழீழ தேசத்திற்கான அந்த போராட்டத்தை ஒடுக்கியதற்கு பிறகு, எந்த மக்களுக்கு அந்த விடுதலைப்புலிகள் இயக்கம் அரணாக இருந்ததோ, அந்த மக்களுக்கு ஏற்பட்டுள்ள அனைத்து விதமான துன்பங்களைக் கண்டு இன்று உலகத் தமிழினம் வெதும்பி போயுள்ளது. அந்த வெதும்பலின் வெளிப்பாடே இன்றைய மாநாடு.
நமது சொந்தங்கள் அங்கே சொல்லிலடங்கா துன்பங்களை அனுபவத்துகொண்டிருக்கையில் இந்த மாநாடு இங்கே நடக்கிறது. ஆனால், இன்றைய மாநாட்டின் நோக்கமானது, வெறும் ஈழத்தமிழர்களின் இன்றைய நிலையை மட்டும் விவாதிக்கும் மாநாடாக இல்லாமல், உலகத்தமிழர்களின் ஒட்டுமொத்தமான பாதுகாப்பை பற்றி விவாதிக்கும் மாநாடாக இருக்க வேண்டும் என்பது தான் எனது எதிர்பார்ப்பாகும்.
தமிழகம் தாய்த்தமிழகம் என்று உலகத்தமிழர்கள் எல்லாம் எப்போதும் போற்றும் இந்த தமிழகத்தால் கூட அந்த ஈழத்தமிழர்களின் துன்பத்தை துடைக்க முடியவில்லை என்பது தான் மறுக்கவோ அல்லது மறைக்கவோ முடியாத உண்மை.
இந்த ஆண்டு புதுதில்லியில் நடந்த பரவாசி மாநாட்டுக்கு எனக்கும் அதிகாரபூர்வ அழைப்புவிடுக்கப்பட்டது.
ஆடம்பர தங்கும் விடுதியில் அறை, முதல் வகுப்பு விமான டிக்கெட் ஆகியவையும் அந்த அழைப்பில் உள்ளடக்கப்பட்டது. இருந்தபோதும் அந்த மாநாட்டை புறக்கணித்தேன். என்னோடு சேர்ந்து மக்கள் கூட்டணையை சேர்ந்த சிலரும் புறக்கணித்தனர்.
நாங்கள் இந்த மாநாட்டை புறக்கணித்ததற்கு முழு காரணம், இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பு போரில் இந்திய அரசின் பங்கும், அங்கே நடந்த கொலைவெறி படலத்தை தட்டிக்கேட்காத இந்திய பேரசின் இயலாமையுமே ஆகும்.
மேற்குறிப்பிட்ட காரணத்தை இந்தியாவின் வெளிநாடு வாழ் இந்தியர் நலன் அமைச்சர் வயலார் ரவிக்கு நான் எழுதிய கடிதத்திலும் குறிப்பிட்டிருந்தேன்.
அதேதினத்தில் இன்றைய மாநாட்டுக்கு ஏற்பாட்டளாரான டாக்டர் கிருஷ்ணசாமியை சந்தித்தேன். இம் மாநாட்டில் பங்கேற்க முழு சம்மதத்தையும் தெரிவித்தேன்.
அதையடுத்து மறுநாள் மலேசிய தமிழ் நாளிதழ்களில் முதல்பக்கத்தில் செய்தி வெளியானது. அதில் கோவையில் ஜூன் மாதம் நடைபெறும் செம்மொழி மாநாட்டை புறக்கணிக்கும் செய்தியும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மலேசியாவில் இருந்து 80 பேராளர்கள் இங்கு வந்துள்ளனர். அவர்களின் 25 பேர் பினாங்கு மாநில பேராளர்கள். தமிழ் தேசியத்தின் குரல்வலையை நெரித்துபோராட்டத்தை ஒடுக்கிய எந்தவொரு சக்திக்கும் நாம் அடிபணிந்துவிடக்கூடாது என்பது தான் மலேசிய தமிழர்களின் வேட்கையாகும்.
தமிழினத்துக்கென்று தனியொரு நாடடில்லாமல் நாம்படும் அவலங்கள் பல. இருந்தபோதும் அந்த துன்பங்கள் தனியும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதையும் நாம் அறிவோம். அதேநேரத்தில் உலகளவில் பரந்து விரிந்து கிடக்கும் தமிழினத்தின் பாதுகாப்பு அம்சங்களை கலந்தாலோசிக்க மாநாடு ஒன்றில் நாம் இணைந்துள்ளோம்.
உலகம் முழுவதும் தமிழர்கள் பல்வேறான அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றோம். மலேசியா, சிங்கப்பூர், மவுரிசியஸ் என்று பல்வேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுக்கு அவரவர் வாழ்வுரிமை, மொழி ஆகியவற்றுக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.
அவ்வாறான விவகாரங்களையும் இம் மாநாட்டின் வழியாக விவாதிக்க வேண்டும். தமிழினத்தின் பாதுகாப்பிற்கென்றே ஒரு உலகளவிலான பாதுகாப்பு அமைப்பு ஒன்றையும் நாம் ஏற்படுத்த வேண்டும்.
அதற்கெல்லாம் முதல்படிதான் இன்றைய நமது மாநாடு. ஆகவே, வெறும் கூடிப்பேசி, கலையும் கூட்டமைக இல்லாமல், ஆக்ககரமான விவாதங்களின் வழி நமது நோக்கத்தை நாம் அடைய வேண்டுமென்றே எதிர்பார்ப்போடு இன்றைய மாநாட்டை அதிகாரபூர்வமாக திறந்துவைக்கின்றேன்.
மாநாடு இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.
நன்றி: நெல்லை பொடியன் வலைப்பூ |