'லங்கா மாதா' மீது தேசப் பற்று வைக்கத் தவறுபவர்கள், துரோகிகள் என சூழுரைக்கும் மகிந்தா என்கிறார் அரசியல்-பொருளாதார விவகார ஆய்வாளரான Wije Dias
- இனி பொருளாதார போர்: ஆசியாவில் சீனாவிற்கு அடுத்ததாக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் சிறிலங்கா - மகிந்தர் பெருமிதம்
பிரித்தானியாவின் அடிமைத் தனத்தில் இருந்து விடுதலை பெற்ற 62ஆவது நினைவு நாளைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்வில் சிறிலங்கா குடியரசு அதிபர் மகிந்த ராஜபக்ச கடந்த வியாழக்கிழமை சுதந்திர நாள் உரையாற்றினார்.
இரண்டாவது தடவையாகவும் குடியரசு அதிபராக அவர் தெரிவானதன் ஒரே வாரம் கடந்த நிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. தனது அரசின் கொள்கைகளைக் கோடிட்டுக் காட்டுவதற்கான சந்தர்ப்பமாக ராஜபக்ச அதனைப் பயன்படுத்திக் கொண்டார்.
நாட்டை மீளக் கட்டியெழுப்புவது என்ற பெயரில் நடுத்தர வர்க்கத்திற்கு எதிரான பொருளாதாரத் தாக்குதலுக்கு அவர் தயாராகி வருகிறார்.
சுதந்திர நாள் தொடர்பான அனைத்து விடயங்களும் மிகத் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டன.
விழாவிற்கான இடமாக கொழும்பைத் தவிர்த்து கண்டி தெரிவு செய்யப்பட்டது -- அங்கு தான் புத்தரின் புனிதப் பல் வைக்கப்பட்டிருக்கிறது என்பதுடன், பிரிதானியாவை எதிர்த்து நீண்ட காலம் போரிட்ட சிங்கள மன்னனின் இடமும் அது தான். இலங்கைத் தீவில், 1815-இல் பிரித்தானியரிடம் வீழ்ந்த கடைசிப் பிரதேசம் கண்டி.
தனி நாடு கேட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகக் கடந்த மே மாதத்தில் தான் ராஜபக்ச போர் வெற்றியைப் பெற்றிருந்தார். அவரது சுதந்திர நாள் உரையில், “அனைத்து சமூகத்தினரும் சமத்துவத்துடனும் நடுநிலையுடனும் நடத்தப்படுவார்கள்” என உறுதி அளித்த போதும், அவரது முழுப் பேச்சின் சாராம்சத்தையும் விழா நடைபெற்ற இடத்தையும் வைத்துப் பார்க்கின்ற போது அது – தமிழர்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையினர் மீதான சிங்கள இனத்தின் ஆதிக்க நிலையை உறுதிப்படுத்துவதாக இருக்கின்றது.
முன்னைய சுதந்திர நாள் நிகழ்வுகளில், குடியரசு அதிபரின் உரைக்குச் சமாந்தரமாக தமிழில் மொழிபெயர்ப்பு வழங்கப்படுவது வழமை. ராஜபக்ச அந்த மொழிபெயர்ப்பை நீக்கி விட்டார்.
முன்னால் இருந்த கணினித் திரையில் பார்த்து அவர் வாசித்த ஒரு சிறுபகுதி தமிழ் தவிர, ஏனைய முழுப் பேச்சையும் ராஜபக்ச சிங்களத்திலேயே வழங்கினார்.
தமிழர்களுடன் கருத்து இணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளுக்குப் பதிலாக, அவர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விடயமாகவே அது இருந்தது.
“ஒரே நாடு. ஒரே மக்கள். ஒரே சட்டம். இதுவே எமது பாதை” என ராஜபக்ச பிரகடனப்படுத்தி உள்ளார். தமிழர்களுக்கு எதிராக 62 ஆண்டு காலமாகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட பாரபட்ச நடவடிக்கைகள், 1983-இல் உள்நாட்டுப் போருக்கு இட்டுச் சென்ற நிலையில் அவரது இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. 2006-இல் ராஜபக்ச போரை மீண்டும் தொடங்கினார். மனிதத் தன்மை இல்லாத விதத்தில் கொடூரமாக அதனை நடத்தினார். தமிழர்களின் சனநாயக ரீதியான உரிமைகளைக் கால்களில் போட்டு மிதித்தார்.
கடந்த ஆண்டு மே மாதம் முதல் டிசெம்பர் மாதம் வரையில் 280,000 பேரை அவரது அரசு மிகச் சாதாரணமாக முகாம்களில் அடைத்து வைத்தது. ஏனெனில் அவர்கள் தமிழர்கள், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழ்ந்தவர்கள்.
“தாய் நாட்டை ஒரு போதும் மறந்துவிட மாட்டேன். அதனை ஒருபோதும் காட்டிக்கொடுக்க மாட்டேன். இந்த நாட்டில் சிறுபான்மையினர் என்று எவரும் இல்லை. இந்த நாட்டை விரும்பும் அனைத்து மக்களுமே 'லங்கா மாதா'வின் பிள்ளைகள்” என தனது உரையில் ராஜபக்ச தொடர்கிறார்.
இதன் பொருள் - 'லங்கா மாதா' மீது தேசப் பற்று வைக்கத் தவறுபவர்கள், குறிப்பாக, தாம் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுவதற்கு எதிராகப் போராடும் தமிழர்கள் துரோகிகள் ஆவார்கள். அப்படித் தான் அவர்கள் நடத்தப்படுவார்கள்.
இவ்வாறு எழுதியுள்ளார் அரசியல்-பொருளாதார விவகார ஆய்வாளரான Wije Dias. அதனை எமது செய்தித்தளமான புதினப்பலகை-க்காகத் தமிழாக்கம் செய்தவர் ரி. ரேணுபிறேம்.

Wije Dais தொடர்ந்து எழுதியுள்ளதாவது:
ஊடகங்களின் வழக்கமான சோடிக்கப்பட்ட புராணங்களுக்கு அப்பால், இந்த நிகழ்வு தொடர்பில் பொது மக்களிடம் சிறதளவு ஆர்வமே இருந்தது. விழாவுக்கு வந்திருந்த சிறிதளவு சாதாரண மக்களும் விழா மேடைக்கு வெளியே நீண்ட தூரத்தில் போடப்பட்டிருந்த அடைப்புக்களுக்கு அப்பால் தடுக்கப்பட்டனர். கண்டி வாசிகள் மத்தியிலும் விழா தொடர்பான பாராட்டுக்களுக்குப் பதில் விமர்சனங்களே அதிகம். படைகளின் அணிவகுப்பு ஒத்திகைக்காக காலவரையறை இன்றி வீதிகள் மூடப்பட்டிருந்தமை குறித்து சிறிய கடை வைத்திருக்கும் ஒருவர் கொதித்துப் போய் உள்ளார். ஆயிரக்கணக்கான காவல்துறையினரையும், படை ஆட்களையும் தங்க வைப்பதற்காக அங்கு இருந்த பாடசாலை ஒன்று மூன்று நாட்கள் மூடப்பட்டதாகத் தாய்மார் புலம்புகிறார்கள்.
விழாவின் பெருமைகள் எல்லாம் சிறிலங்கா பாதுகாப்புப் படைகளின் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. தரை, வான், கடல், ஊர்காவல் படைகள் மற்றும் காவல்துறையின் படையணிகளும், போர்க் கருவிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. உளவு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக 41,000 படை ஆட்கள் ராஜபக்சவால் நியமிக்கப்பட்டிருந்தனர். நிகழ்வில், “போரில் தமது உயிர்களைத் தியாகம் செய்த படையினரையும் அவயங்களை இழந்தவர்களையும் நினைவுகூர்ந்தார்” குடியரசு அதிபர்.
பொருளாதார ரீதியாக நலிவடைந்தவர்களும் கிராமத்து ஏழை இளைஞர்களுமே படைகளில் இணைந்தவர்கள். ஏனெனில் அவர்களுக்கு வேறு வேலை வாய்ப்பு எதுவும் இருக்கவில்லை. பொருளாதாரம் தொடர்பாக ராஜபக்சவின் உரையில் தெறித்த நம்பிக்கை தரும் விடயம் - ஆசியாவில் சீனாவிற்கு அடுத்ததாக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை சிறிலங்கா கொண்டிருக்கிறது என அவர் கூறியது தான். அத்துடன் முதலீட்டாளர்களையும் அவர் வரவேற்றார்.
“கடந்த 30 வருட காலங்களில் போரால் சிறிலங்கா மக்கள் இழந்தவைகள் அனைத்தையும் மீட்டுத் தருவதற்கு” தனது புதிய பதவிக் காலத்தைப் பயன்படுத்துவார் என ராஜபக்ச உறுதியளித்தார்.
தனது தேர்தல் அறிக்கையில் அதனை அவர் “பொருளாதாரப் போர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் உண்மையில், படைத்துறைச் செலவுகளுக்கு ஏராளமான பணத்தை ராஜபக்ச அரசு ஒதுக்குவதால் நாட்டின் பொருளாதாரம் பெருமளவில் கடனாளியாகி உள்ளது.
வரவு-செலவுத் திட்டத்தில் ஏற்பட்ட பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக கடந்த ஆண்டு 2.6 மில்லியன் டொலர் கடனை அனைத்துலக நாணய நிதியத்திடம் [International Monetary Fund - IMF] இருந்து அரசு பெற்றது.
இந்த ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தை தேர்தல்கள் முடியும் வரையும் ராஜபக்ச பின்போட்டார். அனைத்துலக நாணய நிதியத்தின் நிபந்தனைகளான - அரசுத் துறையை மீளக்கட்டமைப்பது, தனியார் மயப்படுத்துவது, பொது மக்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகைகளைப் பெருமளவில் குறைப்பது போன்றவற்றைச் செயற்படுத்துவதற்காகவே அவர் அவ்வாறு தாமதித்தார்.
பொருளாதாரச் சிக்கல்களால் ஏற்படும் சுமைகளை யார் சுமக்கப் போகிறார்கள் என்பது தொடர்பான சந்தேகங்களை ராஜபக்சவின் உரை தீர்த்து வைத்தது. “ஆற்றல் மிக்க முன்னேற்றகரமான நாட்டை உருவாக்குவதற்கு சோம்பல் மிக்க, சோம்பேறித் தனமுள்ள, வலுக் குறைந்த நாட்டை மீளமைக்க வேண்டி உள்ளது” என அவர் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்பான ஒரு நிலையில் அவரது மேற்கண்ட கருத்து வெளியாகியுள்ளது. போரில் சண்டை போட்ட, எவ்வளவு நேரம் பணியாற்றுகிறோம் என்ற சிந்தனையே இல்லாமல் பணியாற்றிய சாதாரண படை ஆட்களைப் போல எல்லாரும் உழைக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
உழைக்கும் வர்க்கத்தின் சுகாதாரம், கல்வி, பொது நலன் போன்றவற்றில் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்துவத்கு “மக்களின் நண்பன்” எனச் சொல்லப்படும் பொது நிர்வாக அலகினால் செய்யக் கூடியது ஒன்றுமில்லை. ராஜபக்ச சொல்கிற தேசத்தின் மீளமைப்பு என்பது பணக்காரர்கள் சிலர் மேலும் இலாபம் அடையக் கூடிய விதத்தில் அவர்களுக்கு உதவுவது என்பதையே குறிக்கிறது.
வெளிநாட்டுக் கொள்கைகள் குறித்து அதிபர் தனது உரையில் மிகக் கவனமாகவே குறிப்பிட்டுள்ளார். தேர்தல் பரப்புரைகளின் போது, அனைத்துலகச் சதியில் இருந்து நாட்டைக் காப்பாற்றும் ரட்சகனாகவே ராஜபக்ச தன்னைக் காட்டிக் கொண்டார்.
மனித உரிமைகள் என்ற பெயரில் கொழும்பு மீதான தமது செல்வாக்கை அதிகரிக்கவும் தமது எதிரி நாடுகளை, குறிப்பாகச் சீனாவைக் கட்டுப்படுத்தவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்றன மேற்கொண்ட நடவடிக்கைகளே அவ்வாறு "சதி" என வர்ணிக்கப்பட்டது.
“வெளிநாடுகளுடனான உறவுகளின் பொற்காலத்திற்குள் சிறிலங்கா தற்போது நுழைகிறது” என ராஜபக்ச கண்டியில் அறிவித்தார். “உங்கள் எல்லோருக்கும் தெரியும், எமது வெளியுறவுக் கொள்கை சுதந்திரமானதும் அணிசேராததுமாகும்…. இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற எமது அயல் நாடுகளுடன் நாங்கள் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருகிறோம் என்பது ஒன்றும் இரகசியமல்ல. அதே போன்று ஆபிரிக்கா, மேற்கு, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுடனும் நாம் நெருக்கமான தொடர்புகளைப் பேணுகிறோம்.
- இங்கு கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியது - அமெரிக்கா அதில் குறிப்பிடப்படவில்லை என்பது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் கடந்த ஆண்டில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் போர்க் குற்றங்கள் தொடர்பில் சிறிலங்காவிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மான வரைவை சீனா மற்றும் தனது நட்பு சக்திகளின் துணையுடன் கொழும்பு தோற்கடித்தது. அதன் பின்னர், அமெரிக்க செனட்டின் வெளியுறவுக் குழுவின் அறிக்கையில், மனித உரிமைகள் விடயத்தை அமெரிக்கா சற்று அடக்கி வாசிக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது. அவ்வாறான ஒரு ஒற்றைப் போக்கு அணுகுமுறை, அமெரிக்காவின் இந்து சமுத்திரப் பிராந்திய நலன்களுக்குச் சாதகமானதல்ல எனவும் அறிக்கை குறிப்பிட்டிருந்தது. இருப்பினும், தன்னுடைய வெளிநாட்டு உறவுகளின் “பொற் காலத்திற்குள்” நுழைவதற்கு வெகு நாட்கள் முன்பாகவே தெற்காசிய மற்றும் அனைத்துலக ஆதிக்க சக்திகளின் தீவிரமான போட்டிக்குள் சிறிலங்காத் தீவு அடித்துச் செல்லப்பட்டுவிட்டது.
சீனாவை ஓரம் கட்டி வெளியேற்றுவதை உறுதிப்படுத்தவதன் மூலம் கொழும்பு மீதான தனது செல்வாக்கை உறுதிப்படுத்தும் உள்நோக்கம் அமெரிக்காவுக்கு இருக்கிறது. ஏனெனில் மத்திய கிழக்கும் மற்றும் ஆபிரிக்கா ஆகியவற்றுக்கான தனது பிரதான கடல் வழி விநியோகப் பாதையைப் பாதுகாப்பதற்கான தனது கடற்படை மூலோபாயத்தின் ஒரு தளமாக சிறிலங்காவைப் பயன்படுத்த சீனா முயற்சிக்கிறது என்பதாலாகும்.
நடுநிலையைப் பேணிச் சமாளித்துப் போவதற்கு ராஜபக்ச எவ்வளவு தான் முயன்றாலும், அவரது முயற்சிகள் எல்லாம் பிரதான ஆதிக்க சக்திகளின் போட்டியிலும் முரண்பாட்டிற்குள்ளும் சிறிலங்காவை எக்கச்சக்கமாக சிக்க வைக்கின்றது.
- இதனால் வரக்கூடிய மிகமோசமான விளைவுகளுக்கு ஏற்கனவே உதாரணங்கள் இருக்கின்றன. அமெரிக்கா தலைமையில் ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளில் நடைபெறும் போர் மற்றும் அங்கிருந்து பாகிஸ்தானுக்கு மறைமுகமாகப் பரவியுள்ள போர் என்பன அதற்குச் சிறந்த உதாரணங்கள்.
அமைதியையும், இயல்பு வாழ்வையும், உலகின் அங்கீகாரத்தையும் சிறிலங்காவுக்குக் கொண்டு வந்த வலிமை வாய்ந்த தலைவர் தான் என்ற விம்பத்தை உருவாக்க ராஜபக்ச முயற்சிக்கிறார். அவர் தன்னை சிறிலங்காவின் உழைக்கும் நடுத்தர வர்க்கத்தின் பிரதிநிதியாக காட்டிக் கொண்டாலும், பிரித்தானியாவின் அடிமைத்தனத்தில் இருந்து சுதந்திரம் பெற்ற 62 ஆண்டுகளில் நாட்டின் உழைக்கும் மக்களுக்கு வறுமையையும் இனப்போரையும் தவிர வேறு எதனையும் அவர் பெற்றுத் தரவில்லை |