தமிழர் திருநாள்- தைப்பொங்கல் நாளான இன்று- தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைக் குரலாக- ‘தாய்நாடு’ இணையத்தில் உலா வருகிறது.
விரைவில் அச்சிலும் வெளிவரப் போகும் ‘தாய்நாடு’ தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல், சமூக, பண்பாட்டு விடயங்களில் ஆணித்தனமான தனது கருத்துகளை முன்வைக்கத் தயங்காது.
எங்கெல்லாம் தமிழ்த் தேசியத்துக்கும் தமிழ்த் தேசிய இனத்துக்கும் இன்னல் விளைவிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் எமது குரல் ஓங்கி ஒலிக்கும்.
நடுநிலைமை என்று வெளியுலகுக்குச் சொல்லிக் கொண்டு- தமிழ்த் தேசிய இனத்துக்கு நன்மை தரமுடியாத விடயங்களை உள்ளீர்த்துக் கொள்வதில் எமக்கு உடன்பாடு கிடையாது. அதேவேளை, சமூகத்துக்குச் சொல்ல வேண்டியதை- சொல்லாமல் விடும் தவறையும் நாம் இழைக்க மாட்டோம்.
இன்றைய உலகில் மலிந்து போயுள்ள ஊடக யுத்தத்துக்குள்ளே சிக்கிக் கொள்வதற்கும் நாம் தயாரில்லை.
தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்காக ஓங்கிக் குரல் கொடுப்பதே இன்றைய தேவை.
தமிழ் மக்களின் வெளிக் கொணர வேண்டிய பிரச்சினைகள் ஆயிரம் இருக்கும் போது- வீண் விவாதங்களில் நேரத்தையும் உழைப்பையும் வீணடிக்க முடியாது.
ஊடகங்கள் மக்களின் பிரச்சினையை எடுத்துச் சொல்லும்- அவர்களுக்கு சரியான பாதையைச் சுட்டிக்காட்டும் கருவிகளாக இருக்க வேண்டும். ஆனால் அந்தப் பாதை வழியிலான நகர்வும் நடப்பும் தமிழ்மக்களின் விருப்பின்பாலானது. அந்த உரிமையை மறுக்கின்ற போக்கில் எம்மால் உடன்பட முடியாது.
மாறிவரும் உலகுக்கு ஏற்றவாறு- நாமும் புதிய புதிய சிந்தனைகளில்- ஆய்வுகளில் இறங்கும்போது தான் தெளிவு பிறக்கும். சரியான பாதையை இனங்காண முடியும். மாற்றுச்சிந்தனை என்று புறக்கணிக்கப்படும் போது தான் கருத்துத் திணிப்பும் இயல்பாகவே உருவாக்கம் பெறுகிறது.
தமிழ் மக்களிடத்தில் சரியான கருத்துகளை எடுத்துச் சொல்வதிலும்- ஒரு நடப்பினால் ஏற்படக் கூடிய சாதக பாதகங்களைச் சொல்வதிலும் ‘தாய்நாடு’ உறுதியாக இருக்கும்.‘
தாய்நாடு ஒரு புதிய மாற்றத்துக்கான வழிகாட்டியாகவும் இருக்கும்.
அடுத்த இதழில் சந்திப்போம்.
ஒற்றுமையே பலம்
- தாய் நாடு குழுமம் -
வெகு விரைவில் இணையத்திலும் பத்திரிகை வடிவாகவும்
அதுவரை தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைக் குரலாக- ‘தாய்நாடு’ இணைப்பில் முழுமையான பதிவு 01-12